Marc Goodman

மார்க் குட்மேன்: வருங்காலத்தில் குற்றங்களின் நிலையைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை.

1,217,408 views • 19:25
Subtitles in 27 languages
Up next
Details
Discussion
Details About the talk
Transcript 27 languages
Translated by J.S. Themozhi
Reviewed by Vijaya Sankar N
0:11

நான் வருங்காலத்தில் நிகழ வாய்ப்புள்ள குற்றங்களையும் தீவிரவாதத்தையும் பற்றி படிப்பவன். வருங்காலத்தில் குற்றங்களின் நிலை என்னை பயமுறுத்துகிறது. நான் தெரிந்து கொண்டது, உண்மையில் எனக்கு அச்சத்தைத் தருகிறது. நான் நம்ப விரும்புவது தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கென வாக்களிக்கப்பட்ட அருமையான தொழில்நுட்ப கற்பனை உலகம் கிடைக்கும் என்பதை, ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. நான் காவல் துறையில் பணிபுரிந்திருக்கிறேன். அந்த அனுபவம் எதை எதிர்நோக்க வேண்டும் என்பதைப் புரிய வைத்துள்ளது. நான் தெருவில் காவல் அதிகாரியாக, ரகசிய புலனாய்வு அதிகாரியாக, தீவிரவாதத்தை ஒழிக்கும் திட்டமிடுபவராக, உலகத்தில் 70 நாடுகளுக்கும் மேலாக பல இடங்களில் பணி செய்துள்ளேன். நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வன்முறையையும், சமுதாயத்தின் இருண்ட பக்கங்களையும் பார்த்ததன் விளைவு, எனக்கு இந்த கருத்து தோன்றியுள்ளது. குற்றவாளிகளுடனும், தீவிரவாதிகளுடனும் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் நல்ல படிப்பினையைத் தந்துள்ளது. அவர்கள் எனக்கு நிறைய கற்றுத் தந்துள்ளார்கள், அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1:07

இன்று உங்களுக்கு காட்டவிருப்பது நாம் வியக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியின் மறு பக்கத்தை, நாம் மிகவும் விரும்பும் தொழில்நுட்பம், இந்த டெட் சமூகத்தின் உறுப்பினர்களால், கையாளப்படும் தொழில்நுட்பக் கருவிகள் பல உலகில் அருமையான மாற்றங்களைக் கொண்டுவரும். ஆனால் அவைகளே தற்கொலைப் படையினர் கையில் கிடைத்தால் விரும்பத் தகாத விளைவுகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.

1:30

நான், குற்றவாளிகள் எவ்வாறு தொழில்நுட்பக் கருவிகளை உபயோகிக்கிறார்கள் என்பதை இளம் ஊர்க்காவல்துறை அதிகாரியாக இருந்தபொழுது கவனித்துள்ளேன். அந்த நாட்களில் கைபேசியும், ரேடார்கதிர் கண்காணிப்பு கருவியும்தான் பெரிய தொழில்நுட்பக் கருவிகள். இது நகைப்பிற்குரியதாக இருந்தாலும், போதைப்பொருள் கடத்தும் கூட்டத்தினரையும், வன்முறைக் கும்பலையும் நான் கண்காணிக்க நேர்ந்த காலத்தில், காவல்துறையினருக்கு இக்கருவிகள் கிடைக்குமுன்னே குற்றவாளிகள் இக்கருவிகளை உபயோகித்துக் கொண்டிருந்தார்கள்.

1:49

இருபதாண்டுகளுக்குப்பின், இன்றும் கைபேசியை உபயோகிப்படுதினாலும், அத்துடன் அதை இயக்கும் ஒலிக்கற்றை கட்டமைப்பு மற்றும் ஒலிபரப்பு கோபுரங்களையும் நிர்மாணிக்கும் அளவிற்கு முன்னேறி இன்று மெக்சிகோவின் போதைப்பொருள் கும்பல், அந்நாட்டின் 31 மாநிலங்களிலும் ஒரு உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது. தேசிய அளவில் மறைகுறியீடுகள் நிறுவிய தகவல் தொலைதொடர்பு அமைப்பு அந்தப் போதைப்பொருள் கும்பல் வசம் உள்ளது. எண்ணிப்பாருங்கள், எத்தனை புதுமையான கண்டுபிடிப்புகள் இதை அமைக்க துணை செய்திருக்கும். என்ன ஒரு உள்கட்டமைப்பு இதற்கு தேவைப்பட்டிருக்கும். அத்துடன் இதையும் சிந்தித்துப் பாருங்கள், ஏன் என் கைபேசி சரியான சமிக்கை கிடைக்காமல் சான் ஃபிராசிஸ்கோ நகரில் இயங்க மறுக்கிறது? எப்படி இந்த நிலை ஏற்பட்டது? (சிரிப்பு) இதுமட்டும் எனக்குப் புரியவில்லை. (கரகோஷம்)

2:29

நாம் தொடர்ந்து குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் குறைவாகவே மதிப்பிடுகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி, உலகின் தொடர்புகளை மேலும் வெளிப்படையாக்கிவிட்டது, பெரும்பாலும் அது நன்மைக்கே. ஆனால், வெளிப்படையான தகவல் பரிமாற்றம் எதிர்பாராத விளைவுகளையும் அளித்துவிடுகிறது.

2:42

2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலை நினைவில் கொள்ளுங்கள். தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதிகளிடம் ஏ கே -47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் குண்டுகளை வீசி உணவுவிடுதிகளில் உணவருந்திக் கொண்டிருந்த, வீடு திரும்ப ரயிலுக்கு காத்திருந்த அப்பாவிமக்களை கொன்று குவித்தார்கள். இது போன்ற கொடிய ஆயுதங்கள் உபயோகப்படுத்தப் படுவது தீவிரவாத தாக்குதல்களில் புதிதல்ல. துப்பாக்கிகளோ குண்டுகளோ தாக்குதலில் பயன்படுத்தப் பட்டது புதிதல்ல. இந்த முறை மாறுபட்டு தெரிந்தது என்னவெனில் தீவிரவாதிகள் வைத்திருந்த நவீன தொழில்நுட்ப தொலைதொடர்பு கருவிகளை அவர்கள் உபயோகித்த விதம், அதன் துணைகொண்டு மேலும் மக்களைத் தேடிப்பிடித்து அவர்களை படுகொலை செய்தார்கள். அவர்களிடம் கைப்பேசிகள் இருந்தன. ப்ளாக் பெர்ரி போன்ற ஸ்மார்ட்போன்கள் இருந்தன. செயற்கைக்கோள் வரைபடங்களை உபயோகிக்க வாய்ப்பும் இருந்தது. அவர்களிடம் செயற்கைக்கோள் தொலைபேசிகள், இரவில் பார்க்க உதவும் கண்ணாடிகள் ஆகியவை இருந்தன. ஆனால், அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஒரு தொலை தொடர்பு மையமே அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் அனைவரும் இது போன்ற படங்களை செய்திகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துள்ளோம், தகவல் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு மையம் இது. தீவிரவாதிகள் அவர்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டு மையத்தை பாக்கிஸ்தான் எல்லை அருகில் நிறுவி அதன் மூலம் பிபிஸி, அல் ஜசீரா, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை கண்காணிக்கிறார்கள். அத்துடன் இணையம், சமூக வலைதளங்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து தாங்கள் தாக்குதலில் அடையும் முன்னேற்றங்களையும் எத்தனை மக்களை படுகொலை செய்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். இதை எவ்வாறு குற்றவாளிகள் உபயோகிக்கிறார்கள்? இவை அனைத்தையும் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே தெரிந்தும் கொண்டிருந்திருக்கிறார்கள்.

4:04

இதைப்போன்ற, தீவிரவாத அமைப்புகளின் புதுமையான மையங்கள் தீவிரவாதிகளுக்கு இணையற்ற சூழ்நிலை விழிப்புணர்வுகளைத் தருவதுடன் காவல்துறையையும், அரசாங்கத்தையும் மிஞ்சும் போர்த்திறத்தைப் பெற அனுகூலமாக உள்ளது. இதை எவ்வாறு குற்றவாளிகள் உபயோகிக்கிறார்கள்? இதனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்.

4:20

தீவிரவாதிகள் மும்பையில் செய்த 60 மணிநேர முற்றுகையின் ஒரு தருணத்தில் அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று மேலும் மக்களை கொலை செய்ய தேடினார்கள். தங்கும் விடுதியின் மேல்மாடி அறை ஒன்றின் கதவை உதைத்துத் திறந்தனர். அங்கே ஒருவர் படுக்கையின் பின்னே ஒளிந்திருந்தார். அவர்கள் அவரிடம், "யார் நீ? இங்கு என்ன செய்கிறாய்?" என்று மிரட்டினார்கள். அந்த மனிதர், "நான் ஒரு அப்பாவி பள்ளி ஆசிரியர்" என்றார். ஆனால், நிச்சயமாக தீவிரவாதிகளுக்கு எந்த ஒரு இந்தியப் பள்ளி ஆசிரியருக்கும் தாஜ் போன்ற உல்லாச விடுதியில் தங்கும் வசதி இருக்காது எனத் தெரியும். அவர்கள் அந்த மனிதரின் அடையாள அட்டையைப் பிடுங்கினார்கள். தீவிரவாதிகளின் தகவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்கள். கட்டுப்பாட்டு மையத்தில், அந்த மனிதரின் பெயரை இணையத்தில் கூகுளில் தேடி ஒரு படத்தை கண்ட பின்பு, மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் உங்கள் பிணயக்கைதி குண்டானவரா? முன் வழுக்கை உள்ளதா? கண்ணாடி அணிந்துள்ளாரா? என்று கேட்டார்கள். கிடைத்த பதில், "ஆமாம், ஆமாம், ஆமாம்" என்பதே. கட்டுப்பாட்டு மையம் மேலும் தகவல் தேடி அவர் யார் என்று கண்டு கொண்டார்கள். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் அல்ல. அவர் இந்தியாவின் இரண்டாவது பெரும் செல்வந்தர், ஒரு தொழிலதிபர். அவரைப் பற்றி தகவல் தெரிந்து கொண்ட தீவிரவாத கட்டுப்பாட்டு மையம் மும்பை தீவிரவாதிகளுக்கு இட்ட கட்டளை, ("அவனை கொல்லுங்கள்.")

5:31

நாம் அனைவரும் நம் தனியுரிமை கொள்கை அமைப்புகளை 'ஃபேஸ்புக்கில் பாதுகாப்பதில் முனைப்போடு இருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், நம்மைப் பற்றி அனைவரும் அறியுமாறு உள்ள செய்திகள், நமக்கு எதிராக உபயோகப் படுத்தப்படும். அதைதான் தீவிரவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் தேடலுக்கு உதவும் மென்பொருள் ஒன்றினால் உலகில் யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும். அது போன்ற காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

5:54

மும்பை தீவிரவாதத் தாக்குதலில், தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு தொழில்நுட்பத்தை பெரிதும் பயன்படுத்தியதை சாட்சிகள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தீவிரவாதிகள் ஒருபுறம் பிணைக் கைதிகளை கொன்று கொண்டும், மறுபக்கத்தில் கைபேசியின் தகவல்களை படித்தவாறும் இருந்திருக்கிறார்கள். முடிவில், அப்பாவி மக்களில் 300 பேர் கடுமையாக தாக்கப் பட்டுள்ளார்கள், 172 க்கும் மேலான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள்.

6:20

நடந்த சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள். 60 மணி நேர தீவிரவாதத் தாக்குதலில், 10 தீவிரவாதிகள் உபயோகப் படுத்தியது ஆயுதங்களை மட்டுமல்ல, தொழில்நுட்பக் கருவிகளையும்தான், இவற்றால் 20 கோடி மக்கள் வாழும் நகரத்தை செயலிழக்க செய்தார்கள். பத்து தீவிரவாதிகள் 20 மில்லியன் மக்களை செயலிழக்க செய்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. நம்மைப் பற்றிய தகவல்கள் பகிரங்கமானால் தீவிரவாதிகள் இவ்வாறு செய்ய வாய்ப்புள்ளது.

6:49

இந்த நிகழ்ச்சி நடந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தை வைத்து தீவிரவாதிகள் இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும்? வரும் நாட்களில் என்னென்ன செய்ய முடியும்? ஒருவரின் செயல் அடுத்தவரை பாதிப்பது பலமடங்கு அதிவேகமாக வளர்கிறது, அந்த வளர்ச்சி நன்மையாகவும் இருக்கிறது தீமையாகவும் இருக்கிறது.

7:09

இது தீவிரவாதத்திற்கு மட்டும் பொருந்தாது. குற்றங்களிலேயே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது நிறைய குற்றங்களையும் செய்ய முடியும். அந்த நாட்களில் கத்தியும் துப்பாக்கியும் குற்றங்களுக்கு துணை போனது. குற்றவாளிகள் ரயிலில் கொள்ளை அடித்தார்கள். ரயிலில் 200 பேரை கொள்ளை அடிக்க முடிந்தது புதுமையாக இருந்தது. காலம் மாறியபின், இணையத்தை பயன்படுத்தி செய்யும் குற்றங்கள் பலுகிப் பெருகிவிட்டன. உண்மையில் உங்களில் பலருக்கு சமீபத்தில் நிகழ்ந்த சோனி ப்ளேஸ்டேஷன் சம்பவம் நினைவிருக்கலாம். அப்பொழுது அந்தரங்க தகவல்கள் வெளியானதால் 100 மில்லியன் மக்கள் கொள்ளை அடிக்கப்பட்டனர். இதை சிந்தித்துப் பாருங்கள். உலக மனித வரலாற்றில் எப்பொழுதாவது ஒரு மனிதன் 100 மில்லியன் மக்களை கொள்ளை அடிக்க முடிந்திருக்கிறதா?

7:50

நிச்சயமாக இது திருட்டுடன் மட்டும் நிற்கப் போவதில்லை. தொழில்நுட்பத்தின் மற்ற பிற வளர்சிகளையும் குற்றவாளிகள் உபயோகிக்க முடியும். உங்களில் பலருக்கு இந்த அருமையான காணொளியை சென்ற 'டெட்' கருத்தரங்கில் பார்த்தது நினைவிருக்கலாம், ஆனால் அனைத்து குவாட்காப்ட்டர் கூட்டம் .அழகானதும் அருமையானதும் அல்ல அவைகளை இசைக்க மத்தளக் குச்சிகள் வைத்திருக்க போவதில்லை. சில 'ஹெச்டீ' காமெராக்களும் வைத்திருக்கும். அவற்றினால் புரட்சி செய்பவர்களை கண்காணிக்கும். மேலும் திரைப்படங்களில் வருவது போல, குவாட்காப்ட்டர்களிடம் ஆயுதங்களையும் தானியங்கி துப்பாக்கிகளையும் கொடுக்கலாம். இந்த இயந்திரங்கள் இசை இசைப்பது அழகாக இருக்கலாம், ஆனால் இந்தக் கூட்டம் உங்களை சுட்டுக் கொள்ள துரத்துமானால் அது அழகாக இருக்காது.

8:32

உண்மையில், முதலில் குற்றவாளிகளும், தீவிரவாதிகளும் இயந்திரங்களிடம் ஆயுதங்களைக் கொடுக்கவில்லை. அது எங்கே தொடங்கியது என்று நமக்குத் தெரியும். ஆனால் தீவிரவாதிகளும் உடனே இதனை கற்றுக் கொள்கிறார்கள். சமீபத்தில் எஃப் பி ஐ ஒரு அல் காய்தா உறுப்பினரை அமெரிக்காவில் கைது செய்தது, அந்த தீவிரவாதி தொலைக்கட்டுப்பாட்டில் இயங்கும் ஆளில்லா விமானங்களில் சி4 வெடிகுண்டுகளை நிரப்பி அரசாங்க கட்டிடங்களில் மோதச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான். இந்த ஆளில்லா விமானங்கள் மணிக்கு 600 மைல்களுக்கும் மேல் பறக்கும் திறனுடையது.

8:55

எப்பொழுது புதிய தொழில் நுட்பம் அறிமுகப் படுத்தப் பட்டாலும் குற்றவாளிகள் அதை உபயோகிக்க தயாராக இருப்பார்கள். நாம் முப்பரிமான அச்சுப்பொறியாகிய 3டி பிரிண்ட்டரை பார்த்துள்ளோம். உங்களுக்குத் தெரியும் அதன்மூலம் பலவிதமான மூலப்பொருள்களான பிளாஸ்டிக், சாக்லேட், உலோகம், கற்காரை ஆகியவற்றைக் கொண்டு மிகத் துல்லியமான அச்சுக்களை உருவாக்க முடியும் என்று. என்னால் அந்த 3டி பிரிண்ட்டரில் ஒருநாள் இந்த அழகிய வாத்து பிரதியை செய்ய முடிந்தது. ஆனால் அதே சமயம், தன் மார்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு தங்களையே மனித வெடிகுண்டாக மாற்றிகொள்ளும் தற்கொலைப் படையினருக்கு இந்த 3டி பிரிண்ட்டர் கிடைத்தால் என்ன செய்வார்கள்? என்றும் தோன்றியது.

9:34

பெரும்பாலும் இதுபோல, உலோகத்தால் அச்சு செய்ய முடிந்தால், துப்பாக்கியை அச்சில் வார்க்க முடியும். உண்மையில், மேலும் சக்திவாய்ந்த துப்பாக்கியையும் உருவாக்கமுடியும். இங்கிலாந்தில் ஆயுதம் வைத்துக்கொள்வதைத் தடுக்கும் கடுமையான சட்டம் உள்ளது. இனிமேல் ஆயுதங்களை இங்கிலாந்திற்கு கொண்டுவரத் தேவை இருக்காது. 3டி பிரிண்ட்டர் மட்டும் கொண்டு வந்தால் போதும் தேவையான துப்பாக்கியை அங்கிருக்கும் பொழுது தயாரித்துக் கொள்ளலாம். அதுபோல, துப்பாக்கி குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.

10:10

ஆனால், இந்த பிரிண்ட்டர்கள் வரும் நாட்களில் பெரிதாக செய்யப்பட்டால், மற்ற என்ன பொருட்களை நம்மால் பிரிண்ட் செய்ய முடியும்? தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரிய பிரிண்ட்டர்களை உருவாக்க முடியும்.

10:17

நாம் முன்னேறும் பொழுது, இணையத்தின் வளர்ச்சி போல மற்ற தொழில் நுட்பங்களும் வளர்ச்சி அடையும். ஒவ்வொரு நாளும் அதிக மக்கள் இணையத்தை உபயோகப்படுத்த துவங்குகிறார்கள், இதனால் இணையத்தில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. நம்மை சுற்றியுள்ள ஜடப்பொருட்களின் தகவல்கள் தகவல் தொழில்நுட்ப தகவல்களாக மாற்றப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பலவீனப்படும். அதிக கருவிகள் அதிக இணைப்புகளில் சேர்க்கப்பட்டால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. குற்றவாளிகளுக்கும் இது நன்கு தெரியும். தீவிரவாதிகளுக்கும், திருடர்களுக்கும் இது நன்கு தெரியும். ரகசியக் குறியீடுகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தால், உலகையே கட்டுப் படுத்தலாம். இது போன்ற நிலையைத்தான் நாம் எதிர்நோக்கி உள்ளோம்.

10:57

இதுவரை ஊடுருவப்படாத இயக்குதளமோ தொழில்நுட்பமோ இருந்ததில்லை. இது கவலைக்குரியது. இப்பொழுது மனித உடலே தகவல் தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளது. இப்பொழுது நாமே செயற்கை உடலுறுப்புகளை நம்பி வாழும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான செவிவால்நரம்பு பதிப்பு, நீரிழிவு விசைக்குழாய், இதய இயக்கி, மற்றும் இதய அதிர்வு கருவிகள் மக்கள் உடலில் பதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 60,000 மக்களின் உடலில் பதிக்கப்பெற்ற இதய இயக்கி கருவிகள் இணையத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. இதயஅதிர்வுக் கருவிகள் தொலைவில் உள்ள மருத்துவரால் இயக்கப்பட்டு, இதயத்திற்கு மின்னதிர்ச்சி தந்து ஆபத்தில் இருக்கும் நோயாளியை காப்பாற்ற உதவுகிறது. ஆனால், அதற்க்கு தேவை இல்லாத பொழுது யாரோ ஒருவர் மின்னதிர்ச்சி கொடுக்க முயன்றால் அது விரும்பத் தக்கதல்ல.

11:40

நிச்சயமாக, தொழில்நுட்ப வளர்ச்சி மனித உடலையும் தாண்டி மேலும் முன்னேறும். இப்பொழுது நம் செல்களின் அளவில் முனேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, நான் குறிப்பிடும் இந்த தொழில் நுட்பங்கள், சிலிக்கான் அடிப்படையில் ஒன்று மற்றும் பூஜ்யம் என்பதாக இருக்கிறது. ஆனால் மற்றுமொரு இயக்குதளமும் உள்ளது: அது அசல் இயக்குதளமாக விளங்கும் டி.என்.ஏ தகவல்களை ஊடுருவ விரும்புபவர்களுக்கு டி.என்.ஏ ஊடுருவதற்காக காத்திருக்கும் மற்றுமொரு இயக்குதளம். குற்றவாளிகளுக்கு இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதற்குள் பலர் நம் உயிரின் மென்பொருள் போல விளங்கும் டி.என்.ஏ வை அறிந்துகொள்ள முயன்றுகொண்டுள்ளனர். பெரும்பாலானோர் நல்லெண்ணத்துடன் நமக்கு உதவுவதற்காக அவ்வாறு செய்கிறார்கள். சிலர் நோக்கம் தீயதாக இருக்கும்.

12:18

குற்றவாளிகள் இதனை எவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவார்கள்? செயற்கை உயிரியலில் பல அற்புதங்களை நிகழ்த்தலாம். உதாரணத்திற்கு, நான் எதிபார்ப்பது ... தாவர போதைப்பொருட்களிலிருந்து விலகி செயற்கை போதைப்பொருட்களை உருவாக்குவதற்கு மாறுவது. பிறகு தாவரங்களினால் என்ன தேவை இருந்துவிடப் போகிறது? மரிவான தாவரத்தின் டி.என்.ஏ. அல்லது பாப்பி அல்லது கோக்க இலைகளின் டி.என்.ஏ. குறியீடுகளை வெட்டி ஒட்டி அந்த ஜீன்களை ஈஸ்ட்டில் புகுத்தி அந்த ஈஸ்ட்டுகளை கோக்கைன் போதைப்பொருள் தயாரிக்குமாறோ அல்லது மரிவான அல்லது எந்த ஒரு போதை மருந்தையும் தயாரிக்க செய்யலாம். அதனால் ஈஸ்ட்டுகளை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவோம் என்பது ஆர்வத்திற்குரியது. அதனால் உண்மையில் சில வியக்கத்தக்க ரொட்டி மற்றும் பீர்களை அடுத்த நூற்றாண்டில் நாம் எதிர்பாக்கலாம்.

13:02

மனித மரபுத்தொகுதியை வரிசைப் படுத்துவதற்கான கட்டணம் வெகு வேகமாகக் குறைகிறது. இவ்வாறு குறைவது மூர் விதி குறிப்பிடும் வேகத்தில் இருந்தது. ஆனால் 2008 ஆண்டில் இதில் மாற்றம் ஏற்பட்டது. தொழில் நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்ததால் மரபணுத் தொகுதியை வரிசைப்படுத்தும் வேகம் மூர் விதி குறிப்பிடுவதைவிட ஐந்து மடங்காக மாறியது. இது குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.

13:23

இதற்கு முன் நமக்கு கணினியின் அறிமுகத்திலிருந்து 30 ஆண்டுகள் தேவைப்பட்டது இந்த அளவு இணையக்குற்றங்களை எதிர்நோக்க. ஆனால் உயிரியல் முன்னேறும் வேகத்தை பார்க்கும் பொழுது, அதை நம்மைப் போல குற்றவாளிகளும் உணரும் பொழுது, அது உயிரியல் குற்றங்கள் நிகழ்வதை விரைவு படுத்தலாம். எவராலும் இப்பொழுது உயிர்கொல்லி வைரஸ்களையும், மிகக் கொடிய இபோலா, ஆந்த்ராக்ஸ் மற்றும் ஃப்ளூ காய்ச்சல் கிருமிகளையும் உருவாக்க முடியும்.

13:49

சமீபத்தில் சில அறிவியலாளர்கள் மிகவும் சக்தி வாய்ந்த பறவைகாய்ச்சல் உருவாக்கும் எச்5என்1 கிருமிகளை உருவாகினார்கள். இந்நோய் தாக்கினால் 70 விழுக்காட்டினர் இறப்பது உறுதி. ஆனால் இந்நோய் தாக்குவது குறைவு. ஆனால், அறிவியலாளர்கள் சிறிய மரபணுமாற்றங்களை ஏற்படுத்தினால் இதை உயிர்க்கொல்லியாக மனிதர்களை சுலபாமாக தாக்கும் தொற்று நோயாக்க முடியும். அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமல்ல பலகோடி மக்கள் உயிர் இழப்பார்கள். இதனால், நாம் பெருமளவில் பரவும் தோற்று நோய்களை உருவாக்க முடியும். இதனைக் கண்டறிந்த அறிவியலாளர்கள் பெருமையுடன் பகிரங்கமாக தங்கள் கண்டுபிடிப்பைப் பிரசுரித்துள்ளார்கள். இதனால் அனைவரும் படித்து இத்தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

14:29

ஆனால் அதற்கும் மேலாக, மரபணு ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரு ஹேசல் என்பவர் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் புற்று நோய் சிகிச்சைக்கான நவீன சிகிச்சை முறையையில் பாதிக்கப்பட்ட புற்று செல்லை மட்டும் அழித்து அருகில் உள்ள நல்ல செல்களை தவிர்க்கலாம். இது போன்று மனித உடலில் குறிப்பிட்ட எந்த ஒரு செல்லையும் அணுக முடியும். தனிப்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் மறுபக்கமே தனிப்பட்ட ஒருவருக்காக உருவாக்கப்படும் உயிர்க்கொல்லிகள். அதன் துணையால் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் தாக்க முடியும். இதனால் நாட்டின் தலைவர்கள் அணைவரும் பாதிக்கப் பட வாய்ப்புள்ளது. இவர்களை எதிர்காலத்தில் எவ்வாறு காப்பாற்றுவது?

15:03

என்ன செய்வது? இதற்கு வழி என்ன? இவைகள்தான் என்னிடம் எப்பொழுதும் கேட்கப் படும் கேள்வி. என்னை டுவிட்டெரில் பின்தொடர்பவர்களின் கவனத்திற்கு, இந்தக் கேள்விக்கான விடையை டுவிட்டெரில்எழுத உள்ளேன். (சிரிப்பு)

15:14

உண்மையில் இது மிகவும் சிக்கலானது, தவிர்க்க எந்த மாய மருந்துகளும் இல்லை. என்னிடம் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை, ஆனால் எனக்கு சிலவற்றைப் பற்றி தெரியும், 9/11 தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புத் துறையில் சிறந்தவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை இணைத்து உருவாக்கிய பாதுகாப்பு முறை இதுதான். இதை உருவாக்கியவர்கள் உங்களை எதிர்வரும் இயந்திரமனிதர்களால் உருவாகும் பேரழிவில் இருந்து காப்பார்கள் என எண்ணுவீர்களானால் — (சிரிப்பு) எதற்கும் மாற்று பாதுகாப்பு திட்டமொன்றை வைத்துக் கொள்வது நல்லது — (சிரிப்பு) சொல்லிவிட்டேன், அதைப் பற்றி யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். (கரகோஷம்)

15:51

சட்ட அமலாக்கப் பிரிவு தற்சமயம் தனித்து இயங்கும் அமைப்பாக உள்ளது. நாடுகளின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் அச்சுருத்தலோ உலகமயமாகி உள்ளது. இதுவரை காவல்துறை உலகளாவியதாக இல்லை. நம் காவல் அமைப்பில் உள்ள துப்பாக்கிகள், எல்லைக்காவல், பெருங்கதவுகள், வேலிகள் நாம் வாழும் இந்த புதிய உலத்திற்கு பொருத்தமற்றது. அதனால் நாம் எவ்வாறு ஒரு குறிப்பிட தாக்குதலை, நாட்டின் தலைவர்களின் மேல் நடத்தப்படும் தாக்குதல்களை தவிர்ப்பது? அரசாங்கத்தின் இயல்பான நடவடிக்கை நம் தலைவர்களை யாரும் அண்ட முடியாமல் காற்றுப்புக முடியாதவாறு அடைத்து வைப்பது. ஆனால் இனி இது உதவப் போவதில்லை. மரபணு தொகுதியை வரிசைப் படுத்தும் செலவு மிகக் குறைகிறது. யாரும் அதை பெற்றுக்கொள்ள முடியும், வருங்காலத்தில் நாம் அனைவரும் அதை செய்வோம்.

16:27

அதனால் இதைப் பற்றி மாறுபட்டு சிந்திக்க வேண்டும். இப்பொழுது நாம் குடியரசுத் தலைவர், மன்னர்கள் மற்றும் அரசிகளின் டி.என்.ஏ வை எடுத்து நம்பிக்கைக்குரிய குழுவில் உள்ள சில நூறு ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து ஆராய்ந்து, அவற்றில் ஊடுருவலைத் தடுக்கும் சோதனைகளை செய்வது அந்த தலைவர்களுக்கு எவ்விதத்திலாவது உதவமா? அல்லது ஆயிரக் கணக்கான ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பினால் என்ன ஆகும்? அபாயமின்றி சர்ச்சைக்குரிய விதமாக, அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்க வழி செய்தால் என்ன ஆகும்? அதனால் நாம் அனைவரும் உதவும் முயற்சியில் ஈடுபட்டிருப்போம்.

16:56

இந்த முறை நன்கு பயனளிப்பதை சில உதாரணங்கள் மூலம் பார்த்துள்ளோம். திட்டமிட்டகுற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடிமக்களால் அமைக்கப்பட்டு அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி சர்வாதிகாரிகளும் தீவிரவாதிகளும் பொதுசொத்தை கையாளும் விதத்தை உலக அளவில் கண்காணிக்கிறார்கள். அத்துடன் வியக்கும் வகையில் உள்ள உதாரணம் ஒன்றுள்ளது. மெக்ஸிகோ நாட்டில் இதுவரை போதைப்பொருள் கடத்தலின் காரணமாக 50,000 கொலைகள் சென்ற ஆறு ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளன. பலர் கொலையுறுவதால் அனைவரையும் முறையாக புதைக்க வழியின்றி அடையாளமற்ற சமாதிகளில் புதைக்க வேண்டியுள்ளது. சிவாட் க்வாரிஸ் நகரின் வெளியே இதுபோன்ற சமாதிகள் உள்ளன. இதைத் தடுக்க என்ன வழி? அரசாங்கம் செயலற்று போயுள்ளது. அதனால், மெக்ஸிகோவில் குடிமக்கள் துணிவுடன் எதிர்த்துப் போராடி தீர்வு காண முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவாக போதைப்பொருள் விற்பனையாளர்களின் நடவடிக்கைகளை வரைபடமாக உருவாக்குகிறார்கள்.

17:44

நீங்கள் உணருகிறீர்களோ இல்லையோ, நாம் இப்பொழுது தொழில்நுட்ப ஆயுதங்களின் பந்தயத்தில் உள்ளோம். இந்த ஆயுதப் பந்தயம் நடப்பது தொழில் நுட்பத்தை நன்மைக்காக பயன் படுத்துபவர்களுக்கும் தீமைக்கு பயன் படுத்துபவர்களுக்கும் இடையில். இது தீவிரமான அச்சுறுத்தல், அதற்கு நாம் இப்பொழுதே தயாராக வேண்டும். குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தயாராக உள்ளார்கள் என்பதை நான் உறுதியாக சொல்லமுடியும்.

18:03

எனது தனிப்பட்ட நம்பிக்கையில், குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் தேர்ந்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட அரசாங்க அதிகாரிகள் நம்மை பாதுகாப்பார்கள் என நம்பி இருப்பதைவிட, சராசரி பொதுமக்கள் குழுவாக இணைந்து இந்த பிரச்சனையை எதிர்நோக்கி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நாம் நம் பங்கை செய்தால் நம் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். உலகை மாற்ற உதவும் சாதனங்கள் நம் அனைவர் கையிலும் உள்ளது. அதை நாம் எவ்வாறு உபயோககிக்கப் போகிறோம் என்பது நம்மைப் பொறுத்துள்ளது.

18:31

இதுதான் நான் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபொழுது உபயோகித்த தொழில் நுட்பம். தற்கால உலகில் இது பயனற்றதாகிவிட்டது. இது முன்னேற்றமடைய வழியில்லை, உலக அளவிலும் பயன்படவில்லை, இணையத்திலும் நிச்சயமாக பயன்படப்போவதில்லை.

18:44

குற்றங்கள் மற்றும் தீவிரவாதங்கள் பற்றிய கண்ணோட்டம் மாறிவிட்டது. அந்த மாற்றத்திற்கேற்ப நம் அணுகுமுறையும் பகிரங்கமாக சட்டத்தை காப்பதில் அனைவரும் பங்களிப்பதாக மாறவேண்டும். அதனால் உங்களையும் என்னுடன் ஒத்துழைக்குமாறு அழைக்கிறேன். பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் நிபுணர்களை மட்டும் இனி நம்பிப் பயன் இல்லை.

19:04

நன்றி, (கரகோஷம்)

19:07

(கரகோஷம்)

உலக நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாக மாறுவதன் விளைவாக, எதிர்காலம் பிரகாசமாகவும் ஆபத்து நிறைந்தாதாகவும் மாறுகிறது. மார்க் குட்மேன் விவரிக்கும் ஆபத்து நிறைந்த வருங்காலத்தில், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் குற்றங்கள் மோசமாக வளரும் நிலை ஏற்பட்டுள்ளது.

About the speaker
Marc Goodman · Global Security Futurist

Marc Goodman works to prevent future crimes and acts of terrorism, even those security threats not yet invented.

Marc Goodman works to prevent future crimes and acts of terrorism, even those security threats not yet invented.