வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல வருடங்கள் பணி புரிந்த அனுபவத்திற்குப் பிறகு நான்கு வருடங்களுக்கு முன்னால் மனித வாழ்க்கையின் கடுமையான துயரங்களோடு நேரடியாகப் போராடும் சூழல்களை நான் தேடத் துவங்கினேன் தேடலில் நான் கண்ட சில இடங்களில் அன்றாட வாழ்க்கைக்கு மக்கள் ஒவ்வொரு தினமும் போராட வேண்டியிருந்ததைக் கண்கூடாகப் பார்த்தேன் அங்கெல்லாம் அடிப்படை உணவு கூட சரியாகக் கிடைப்பதில்லை இந்த பிளாஸ்டிக் கோப்பை ரவாண்டா எனும் ஆப்பிரிக்க தேசத்திலிருந்து நான் கொண்டுவந்தது. பாபியன் என்னும் ஒரு சிறுவனுடையது நம் முன்னே இருக்கும் மகத்தான கேள்விக்கான அடையாளமாக இதை நான் பேசும் இடங்களுக்குக் கொண்டு செல்கிறேன் நம் நம்பிக்கைக்கான அடையாளமாகவும். ஒரு நாளுக்கு பாபியனுக்குத் தேவையான அளவு சத்தான உணவு இதுவே. அவனது வாழ்க்கையை இந்தச் சிறிதளவு உணவு முற்றிலும் மாற்றுகிறது. இன்று நான் பேச விரும்புவது எதைப் பற்றியென்றால், இன்று காலை இந்த உலகிலுள்ள எழுநூறு கோடி மக்களில் ஏழில் ஒருவருக்கு காலை எழுந்தவுடன் அன்றைய உணவுத் தேவையை எப்படி பூர்த்தி செய்வதென்று தெரிவதில்லை. ஏழில் ஒருவர்.
நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஏன் இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டும்? நம்மில் பலருக்கு பசியைப் பற்றி சிந்திக்கையில் நமது சொந்த வாழ்விலோ பெற்றோர் வாழ்விலோ அதற்கு சற்று முன்னர் அதிகபட்சம் ஓரிரு தலைமுறைகளினுள்ளே கூட பசி ஒரு அன்றாட கவலையாய் திகழ்ந்திருக்கக் கூடும் இது பொதுவாகக் காணக்கூடியது. பசிக் கொடுமை என்பதே புரியாதவர் என்று பொதுவாய் நான் இவ்வளவு நாட்களில் பார்த்ததில்லை. மனிதாபிமானம் கொண்டவர்கள் இன்று உலகத்தின் பிரதான பிரச்சனையாகக் கருதுவது பசிக்கொடுமையைத்தான். மகாத்மா காந்தி சொல்வது என்னவென்றால் "பசியில் வாடும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி சோற்றில் இறைவன் தெரிகிறான்" மனிதாபிமானத்தின் அடிப்படையில் பல்வேறு தளங்களில் செயல்படுவோர் உலக அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் செயல்படுவதுண்டு. 2008-ல் நிகழ்ந்த "உணவுக் கலவரம்" என்று கூறப்படுகின்ற போராட்டங்களைக் காணும்போது அக்கலவரங்களின் பாதிப்பு சுனாமி போன்று அலையாய்ப் பரவி உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையைப் பலமடங்கு உயர்த்தியதைப் பார்க்க முடிகின்றது. பசியின் இத்தகைய அலைக்கழிப்பு வரலாறு முழுவதும் காணக்கிடைக்கின்றது. மனித நாகரிகத்தின் முதன்மை அடையாளம் இத்தகைய பசிக்கொடுமையை முற்றிலும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளே.
மக்களின் உணவுத் தேவைகள் பூர்த்தியாகாதபோது வரும் கலவரங்கள் "மால்துசியன் கலவரங்கள்" எனப்படுகின்றன. தொள்ளாயிரம் கோடி மக்கள் தொகையை எட்டும் நிலையில் நம்மால் எல்லாருக்கும் தேவையான அளவு உணவு உற்பத்தி செய்ய இயலுமா? பசியை நாம் எவ்வகையிலும் தவிர்க்கவே இயலாது. ஒவ்வொருவரும் உணவு உண்டே ஆகவேண்டும். எவ்வளவு மக்கள்! உணவு உற்பத்தியின் முழுமையான செயல்திட்டங்களில் பெரும் அளவு முயற்சிகள் தேவை. ஆனால் நான் முன்னிருந்த துறைகளிருந்து எங்கிருந்து இந்தப் பிரச்சினைக்கு வந்தேன் என்று கூற விரும்புகிறேன். இது நான் என் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் -ல் நான் முதன்முறை தாயானபோது என் முதல் மகளை நான் கையில் கொண்டு பாலூட்டிக்கொண்டிருந்த பொது என் போன்றே தனது மகளைத் தன் கையில் பிடித்திருந்த ஒரு ஆப்பிரிக்கத் தாயின் புகைப்படத்தைத் தொலைக்காட்சியில் நான் கண்டேன். அந்தப் பெண் வாழ்கின்ற எத்தியோப்பியாவில் இரு வருடங்களாகப் பாதித்திருந்த வறட்சி பல லட்சம் மக்களைப் பலி வாங்கியிருந்தது. அந்தக் கணம் வரை அது என்னை பாதிக்கவில்லையெனினும் அன்று நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன் ஏனெனில் அந்தப் புகைப்படத்தில் அந்தத் தாய் அழுகின்ற அவளது குழந்தைக்கு ஊட்ட பால் துளியும் சுரக்காமல் முற்றும் வாடிப்போயிருந்தாள். அந்தக் குழந்தையின் அழுகை என்னை மொத்தமாய் பாதித்தது. ஒரு தாயாக அவளுக்காக நான் மிகவும் வருந்தினேன். அழுகின்ற ஒரு குழந்தைக்கு பாலூட்ட முடியாத கொடுமையை விட இவ்வுலகில் வேறு பெரும் கொடுமை உண்டோ? மனித உயிரின் மிக அடிப்படை எதிர்பார்ப்பல்லவா அது? இதில் மிகவும் ஆத்திரப்படுத்தும் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பதென்று ஏற்கெனவே தெரியும் என்பதுதான்! நமக்கு இது புதிதில்லை.
குணப்படுத்த முடியாத கொடிய நோயோ வியாதியோ இல்லை இது. பசிக்கொடுமை தீர்க்கும் வழி நாம் ஏற்கெனவே அறிந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமக்குத் தெரியாது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது மன்னிக்க முடியாத அளவு பெரும் அலட்சியப்போக்கு. வரலாற்றில் நமது காலகட்டத்தில் நான் கண்ட புகைப்படமானது "ஒரு காலப்பிழை" என்றே சொல்லவேண்டும். எனினும் போன வாரம் கென்யாவில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். மீண்டும் ஒரு தேசம் முழுமையும் பாதித்த பெரும் வறட்சி. தொண்ணூறு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒவ்வொருவரும் அடுத்த நாள் பிழைத்து எழுவார்களா என்பது சந்தேகம். புள்ளிவிவரம் சொல்வது என்னவெனில் ஒவ்வொரு 10 வினாடிகளும் ஒரு குழந்தையை நாம் பசிக்கு பலி கொடுக்கிறோம் இது எய்ட்ஸ் நோய்க்கு மலேரியா மற்றும் காசநோய்க்கு நாம் மொத்தமாய் இழப்பவர்களை விட அதிகம். இதில் பிரச்னை உணவு உற்பத்தி மட்டுமில்லை.
நோர்மன் போர்லாக் என்னும் அமெரிக்க விவசாயப் புரட்சியாளர் என் ஆசிரியர்-வழிகாட்டி ஆவார். இப்பொழுது நான் பேசப் போவது உணவினை மக்களுக்கு கொண்டு செல்லும் வழி பற்றி இந்த வருடமும் கடந்த இரு வருடங்களும் 2008-ன் உணவுக் கலவரம் போதும் உலகில் ஒவ்வொருவருக்கும் 2700 கலோரிகள் உண்ணும் அளவு போதுமான உணவு இருந்தது! பின் ஏன் நூறு கோடி மக்கள் உணவற்று பசியோடு அவதிப்பட நேர்ந்தது? இத்தகைய பிரச்சினைகள் தவிர்க்கப்பட முடியுமெனில் அது நம் கடமையல்லவா? 2008-ல் "லான்செட்" என்னும் மக்கள் நலத் தகவல் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் ஆதாரபூர்வமாக ஒன்றை நிரூபித்தது: ஒரு குழந்தையின் முதல் 1000 வாழ்நாட்களில் (அதாவது பிறப்பு முதல் வயது வரை) அத்தியாவசியமான உயிர்ச் சத்துகள் உணவின் வழியாக வழங்கப்படவில்லை எனில் அக்குழந்தையின் மூளை வளர்ச்சி நிரந்திரமாய் பாதிக்கப்படுகிறது. அக்குழந்தையின் மூளையும் உடலும் நிரந்திரமாய் குறுகிப்போகின்றன. இந்தக் கதிர்ப்படங்களைப் பாருங்கள் இக்குழந்தை நல்ல உணவு கிடைக்கப்பெற்றது; இக்குழந்தை உணவில்லாமல் வாடிய ஒன்று. சத்துகள் இல்லாமல் வளர்ந்த ஒன்று. மூளைத் திசுக்களின் வளர்ச்சியே 40% வரை குறுகியிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். திசு வளர்ச்சியும் நரம்பு முனைகளும் மூளை உள்ளே முற்றுப் பெறாமலிருப்பதை இங்கு இன்னும் தெளிவாக காணலாம். இக்குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும், குறிப்பாக அவர்களது பொருளாதார நிலைப்பாட்டின் மீது இது எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம். இக்குழந்தைகளால் ஒரு அளவுக்கு மேல் சம்பாதிக்க இயலாது. முதல் இரு ஆண்டுகளில் கிடைக்காமல் போன சத்துகள் இக்குழந்தைகளின் வாழ்வியல் திறன்களை கடுமையாய் மட்டுப் படுத்துகின்றன.
விஷயமறிந்த எனக்கு இது மிக வேதனையும் வேகத்தையும் அளிக்கிறது. இதை எப்படித் தவிர்ப்பதென்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். சுலபமான வழிகளில். ஆனாலும், நிலவும் சூழ்நிலையில் இன்று மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மூன்று வயது அடையும் முன்னரே இத்தகைய வளர்ச்சிக் குறைபாடுகளால் நிரந்திரமாக பாதிக்கப்படுகின்றனர். பசியின் கோரப்பிடியில் வாடும் இடங்களின் உள்ளிருந்து என் பொருளாதாரப் பணி அனுபவங்களிருந்து நான் கற்ற பாடங்களை நினைவில் கொண்டு ஆராய்கையில் எங்கே இந்தப் பெரும் இடைவெளி என்று நான் பலமுறை சிந்தித்து இருக்கிறேன்.
உணவுச் சத்து எனும்போது, இவ்வுலகின் மிகப் பழைய சத்து அளிக்கும் முறையாகிய பாலூட்டும் வழக்கத்தை ஆராய்வோம். எல்லாக் குழந்தைகளும் அவர்களது முதல் ஆறு மாதத்தில் தேவையான அளவு தாய்ப்பால் முறையாக அளிக்கப்பட்டால் 22 நொடிகளுக்கு நம்மால் ஒரு குழந்தையை மரணத்தின் பிடியிலிருந்து மீட்க முடியும். நைகர் நாட்டில் பார்த்தோமானால், இவ்வகையில் தேவையான தாய்ப்பால் முதல் ஆறு மாதங்களுக்குக் கிடைப்பது 7% க்கு குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே! மௌரிடானியா நாட்டில் பார்த்தோமானால், 3% க்கு குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே! இந்த சதவிகிதங்களை முறையான பயிற்சி மூலம் எளிதில் மாற்ற முடியும். பழைய முறை உணவுப் பழக்கங்களையும் பாலூட்டும் முறையிலுள்ள அலட்சியங்களையும் எளிதில் பயிற்சிகளின் மூலம் மாற்ற முடியும்; இது குழந்தைகள் உயிரைக் காக்கும் மகத்தான செயலாகும். இன்று, எங்கள் ஐக்கிய நாடுகளின் உணவுத் துறை, வெறுமனே உணவுப் பொட்டலங்களை மட்டும் விநியோகிக்காமல், இத்தகைய உணவுப் பழக்க மாற்றங்களையும் நேரடியாக கற்றுத் தந்து கண்காணிக்கிறோம்.
அடுத்து நான் பேசப் போவது வளரும் குழந்தைகளின் தொடர் சத்துத் தேவைகள் பற்றி. தொலைதூர கிராமங்களில் மழை-புயல்-வெள்ள-பூகம்ப பாதிப்பு நிறைந்த சூழல்களில் உடல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வேண்டிய ஆதார சத்துகள் எங்கிருந்து கிடைக்கும்? நம் நகரங்களிலுள்ள குழந்தைகள் போல அவர்களுக்கு நம் நகரங்களிலுள்ள குழந்தைகள் அனுபவிப்பது போல அவர்களுக்கு ஹார்லிக்ஸ் காம்ப்ளான் எல்லாம் கிடையாது. புரதம், நார்ச்சத்து எதுவும் கடையில் உள்ள பொருட்களில் விற்பதில்லை. அங்குள்ள பெற்றோரை நான் சந்திக்கும்போது இந்தப் பிரச்னை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு இருப்பது தெரிகிறது. அங்கே உள்ள சில கடைகளில் கூட ஆதார சத்துள்ள உணவுப்பொருட்களே இருப்பதில்லை. அவை கைத் தொழிலாகக் கூட தயாரிக்கப்படுவதில்லை. அத்தியாவசியம் எனினும் யாரும் இதைக் கண்டுகொள்வதில்லை.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவுத் துறையில் நாங்கள் ஆதார சத்துக்களின் உற்பத்தி முறைகளையும் எளிய முறை விநியோகத்தையும் அறிவியல் முறையில் ஆக்கபூர்வமாக முன்னேற்றுவதை முக்கிய சவாலாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். சராசரி உணவுடன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சேருவது அவசியமாகையால் இது குறித்த ஆராய்ச்சிகள் எங்களுக்கு மிக முக்கியம். இந்தப் பொட்டலம் ஒரு சமீபத்திய தயாரிப்பு. கடலைகளும் பால் பொடியும் கலந்து செய்யப்படுகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் பலவும் இதில் உள்ளது. இதற்கு எங்களுக்கு ஆகும் தயாரிப்பு செலவு எட்டு ரூபாய். இதை நாங்கள் "மக்கள் காக்கும் உணவு" என்றே கருதுகிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் மூன்று விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட கண்டுபிடிப்பு இது. மூன்றே விஞ்ஞானிகள்! ஆனால் இதை உண்ணும் சதவிகிதக் குழந்தைகளின் 99 சத்துப் பற்றாக்குறையை இது முழுமையாக நீக்குகிறது. ஒரு பொட்டலம் - எட்டு ரூபாய் மட்டும் ஊட்டச்சத்துக்கள் தேவை பெருமளவு பூர்த்தியாகிறது. வளர்ந்த நாடுகளில் சாதாரணமாகக் கருதப்படும் உணவுத் தொழில்நுட்பங்களில் ஓரளவு இருந்தால் கூட பசியை போக்கும் புரட்சி பெருமளவு முன்னேற்றம் பெரும் என்று உறுதியாக நம்புகிறோம். இது சுலபத்தில் கெட்டுப்போகும் உணவுப் பொருளில்லை. குளிர் சாதப் பெட்டியில் வைக்கத்தேவையில்லை. நீர் கூட கலக்கத் தேவையில்லை. (சமயத்தில் கலக்க நீர் இருப்பது கூட இல்லை) இத்தகைய தொழில்நுட்பங்கள் பசியையும் ஊட்டச்சத்து குறைபாட்டையும் எதிர்க்கும் போரில் முக்கிய பங்காற்றும் ஆயுதமாகவே நாங்கள் கருதுகிறோம்.
அடுத்தது நான் பேச விரும்புவது பள்ளிக்கூட சத்துணவு முறை பற்றி. சதவிகித மக்களுக்கு உணவு எவ்வாறாயினும் கிடைக்கும் என்கிற நிலைப்பாடு இல்லை. நகரங்களில் சூழல் வேறு. ஒரு இயற்கை ஆபத்து தாக்குகையில் தொழில்முறை, வாழ்க்கை, பொருளாதாரம் எல்லாம் சேதமடைகிறது. வெள்ளம், பூகம்பம், போர், சண்டை அரசியல் கலவரம் - எல்லாவகை ஆபத்துகளாலும். உற்பத்தியும் வினியோகமும் உடனடியாக பாதிக்கப்படுகின்றன. ஊரின் பொது அமைப்புகள் கூட ஊராட்சி அமைப்புகள் உள்பட உறுதிபட உணவு தொடர்ச்சியாகக் கிடைக்கும் என்று சொல்ல முடிவதில்லை. உலக வங்கியுடனான ஆராய்ச்சியில் நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், இத்தகைய கலவரங்களில் கூட, ஏழை மக்களின் முதல் ஆறுதல் பள்ளிக்கூட சத்துணவு முறையே! உள்ளூர் விவசாயிகளின் விளைச்சல் கொண்டு இந்தக் கோப்பையை நிரப்பும்போது, நின்று போகும் பொருளாதார இயக்கத்தை நாம் முடுக்கி விடுகிறோம். பல ஏழை நாடுகளில், சிறு குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு பதிலாக அதே நேரங்களில் பிச்சை எடுக்கச் செல்கின்றனர். பள்ளியிலேயே உணவு கிடைக்கும்போது அவர்களின் வாழ்க்கை முற்றிலும் புரட்சிகரமான முறையில் மாறுகிறது. பத்து ரூபாயில் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற முடியும்.
குறிப்பாகப் பெண் குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் முன்னேற்றமடைகிறது. பெண் குழந்தைகள் பள்ளி செல்வது வழக்கமாக மிகவும் குறைந்த இடங்களில் கூட பள்ளியிலேயே உணவு கிடைக்கும்போது பள்ளிக்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான அளவு பெண் குழந்தைகளும் வரத் துவங்குகின்றனர். 50% சதவிகிதம்! பெண் குழந்தைகள் பொறுத்தவரையில் இது ஒரு புரட்சியே! பள்ளிக்கு வருவதில் அவர்களுக்கு பிரச்சனை எதுவுமில்லை. உணவும் கிடைக்கிறது அல்லவா? அத்தகைய குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு அந்த உதவி நிச்சயமாக தேவை. இவ்வாறு பெண் குழந்தைகள் பள்ளிக்கு உணவுத் தேவைக்காக வரத்துவங்கும்போது குழந்தை திருமணங்கள் குறையத் துவங்குகின்றன. பள்ளி வரும் பெண் குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஒரு ஆதரவாக வார இறுதியில் முப்பது ரூபாய் அளவில் சில உணவுப் பொருட்களை வழங்கினால் பெண் குழந்தைகள் பள்ளிக்கல்வியை முடிக்கும் வரையில் பெற்றோர் தொந்தரவு செய்வதில்லை. இவ்வாறாகப் படித்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கின்றன பொதுவாகத் தாயின் ஊட்டச்சத்து குறைபாடுகள் குழந்தையையும் பாதிக்கின்றன. ஆனால் பள்ளிச் சத்துணவு முறையில் பெண்களின் நலம் பாதுகாக்கப் படுகிறது, இல்லையா?
பசியும், அதை நிவர்த்தி செய்யும் உற்பத்திப் பெருக்கமும் நாள்தோறும் மாற்றங்களை நிகழ்த்துவதை நாம் இன்று கண்கூடாகக் காணலாம். வட கிழக்கு ஆப்பிரிக்காவில் இன்று நடக்கும் பட்டினிச் சாவுகள் நாம் முன்பே கண்டவை. ஆக, இதுவரையான இந்தப் பட்டினிக்கெதிரான போராட்டம் நமக்கு உணர்த்துவது என்ன? நம்பிக்கையான செயல்பாடு நிச்சயம் நமக்கு பட்டினியை வெல்ல வழிதரும் என்பதையே. அடுத்து நான் பேசப்போவது உற்பத்தியான உணவைக் காக்கும் "உணவு வங்கிகள்" முறை பற்றி. கேமரூன் தேசத்தில், பஞ்சம் தாக்குவது ஒவ்வொரு வருடமும் வழக்கம். ஒவ்வொரு வருடமும் பஞ்சத்தில் விவசாயம் நிற்கும்போது ஐக்கிய நாடுகள் சார்பில் நாங்கள் நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம். இரு வருடங்கள் முன்பு இவ்வாறு நிவாரண விநியோகம் நடைபெறும்போது இந்த முறையை மாற்ற எண்ணினோம். நிவாரண உணவை நேரடியாக அவர்களின் கையில் தராமல் "உணவு வங்கி" எனப்படும் கிடங்குகளில் போடத்தொடங்கினோம். பஞ்சத்தின் பொது இந்த வங்கியில் இருந்து உணவைக் கடனாக எடுத்துக்கொண்டு அறுவடையின் போது மீண்டும் "வட்டியுடன்" நிரப்புமாறு கூறினோம். இன்று கேமரூன் கிராமங்களே இந்தக் கிடங்குகளை நிர்வகிக்கின்றன; உணவு "வட்டி" முறை நன்கு செயல்படுகிறது. 5% அல்லது 10% சதவிகிதம் வட்டியாக உணவு வசூலிக்கப்படுகிறது. கடந்த இரு வருடங்களாக, இந்த 500 கிராமங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை பஞ்ச நிவாரணமும் நாங்கள் அனுப்பவில்லை! இத்தகைய உணவு வங்கிகள் இன்று பெருகிக்கொண்டிருக்கின்றன. உணவு வங்கிகள் திட்டம் பள்ளிச் சத்துணவு திட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கிறது. கிராம மக்களே நேரடியாக இதை நிர்வகிக்கின்றனர். முன்னர் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த தேவையான முதலீடும் பணமும் அவர்களிடம் இல்லை ஒரே முறை உதவி பெற்றபின் அவர்களின் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது. இப்படி ஒரு கிராமத்தில் நான் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது வந்த ஒரு மிக நல்ல யோசனை என்னவென்றால், உணவு வங்கியைத் திறக்க மூன்று சாவிகள் வைக்கும் முறை! அங்குள்ள நிலையில் உணவு தங்கம் போன்று விலை உயர்ந்த பொருளாகும். இப்படியான சிறிய திட்டங்கள் சில கிராமங்களில் சிறிய அளவில் துவங்கினாலும் பெரும் மாற்றங்களை ஒரு தேசம் முழுவதும் பரப்ப முடிந்திருக்கிறது.
உணவு மின்னட்டை முறை பற்றிக் கொஞ்சம் பேசுவோம். இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் உணவு விநியோகம் குறிப்பாக பஞ்ச காலங்களில் உணவு விநியோகம் சிறப்பாக நடைபெறுகிறது. "பஞ்சத்திற்கு காரணம் உணவு இல்லாமை மட்டுமில்லை, உணவு இருந்தும் அதை வாங்கும் சக்தி இல்லாமல் போதலும் கூட" என்னும் கருத்து, அறிஞர் அமர்த்தியா சென் அவர்களுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்தது. 2008-ல் இதை நாம் கண் கூடாகக் காண முடிந்தது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இன்றைய நிலை இதுவே. அங்கு உணவு விலை 240% சதவிகிதம் உயர்ந்துள்ளது போன வருட விலையோடு ஒப்பிடுகையில் இருமடங்கு மேலாக! உணவு இருந்தாலும் வாங்க முடியாத நிலையில் பஞ்சம் பரவுகிறது.
இது ஹெப்ரான் என்னும் ஆப்பிரிக்க கிராமம்; இங்கு நாங்கள் நிவாரணத்திற்கு உணவு நேரடியாய் வழங்குவது தவிர்த்து ஒரு உணவுக் கொள்முதல் மின்னட்டையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்குகிறோம். மின்னட்டையின் மீது "நல்ல உணவு உண்பீராக!" என்று அரபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. மின்னட்டை கொண்டு பெண்கள் வந்து ஒவ்வொரு முறையும் 9 பொருட்கள் எடுத்துச் செல்ல முடியும். நல்ல சத்துக்கள் நிறைந்த, உள்ளூரில் தயாராகும் பொருட்களையே இவ்வாறு பெறமுடியும். இந்த மின் அட்டை விநியோக முறையால் சென்ற வருடம் மட்டும் பால், தயிர், வெண்ணெய் வகைகள் விற்பனையின் மூலம் உள்ளூர் பால்பண்ணை உற்பத்தி 30% சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடைகளில் வேலைக்கு இன்னும் பலர் அமர்த்தப்படுகின்றனர். இது எல்லாரும் இணைந்து வென்றதாகவே கருத வேண்டும். உணவு அடிப்படையிலான பொருளாதாரம் இவ்வாறாக நகரத் துவங்குகிறது. இன்று நாங்கள் 30 நாடுகளுக்கு மேல் கைத் தொலைபேசி வழியாக உணவினைக் கொண்டு செல்கிறோம். அகதிகள் நிறைந்த தேசங்கள் உட்பட. இந்த தேசத்தின் தரமே இத்தகைய சிறிய அளவு மாறுதல்களால் மேம்படுகிறது.
இதில் எனக்கு அதிமுக்கியமாகப் படுவது என்னவென்றால் பில் கேட்ஸ் மற்றும் ஹாவர்டு பப்பெட் போன்ற தலைவர்களே இந்த கிராம அளவு மாறுதல்களை ஆராய்ந்தனர்; அவர்கள் கேட்ட கேள்வி இதுதான். "நாள்தோறும் வறுமையிலும் பட்டினியிலும் வாடும் மக்களை, குறிப்பாக சிறிய உள்ளூர் விவசாயிகளை, விளைச்சல் போதுமான அளவு இல்லாத நிலையிலும் தங்கள் குடும்பங்களைக் காக்கவே கஷ்டப்படும் நிலையிலும் பிரச்சனையாகக் கருதாமல் இந்த பட்டினிக்கெதிரான போரில் வீரர்களாக கருதினால் என்ன? ஒரு ஆப்பிரிக்கப் பெண்மணி அவளது கிராமத்தில் சாலைப்போக்குவரத்து இல்லாத காரணத்தால் தான் விளைத்த உணவு வியாபாரம் ஆகாமல் தடுமாறுகிறாள். வாங்க அவள் ஊரில் ஆளில்லை. அவளைத் தேடி, உணவு வாங்கி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வழியை நாம் அனுப்பினால் அது பேருதவியாக இருக்குமல்லவா? இத்திட்டம் 'முன்னேற்றத்துக்காக வாங்குவோம்' என்னும் பெயரில் இப்போது 21 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்களில் எல்லாம் உள்ளூர் விவசாயிகளிடம் நாங்கள் அவர்களது விளைச்சல்களை நிச்சயம் வாங்கி தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டுசெல்கிறோம் என்று உறுதிமொழி அளிக்கையில், அவர்களது விளைச்சல் மும்முறை - நான்கு முறை அதிகரித்துள்ளது. ஆர்வம் மிகுந்து கவலையற்று அவர்கள் இத்தகைய முன்னேற்றங்களைத் தேடத் துவங்குகிறார்கள். இது அந்த கிராமங்களின் சூழலையும் நம்பிக்கையையும் முழுமையாக மாற்றுகிறது. நாங்கள் உலகெங்கும் விநியோகிக்கும் உணவு வளரும் நாடுகளில் இருந்தே வருகிறது. 80% சதவிகிதம் இன்று உள்ளூர் விவசாயிகளிடமிருந்தே வாங்குகிறோம். இந்தத் திட்டம் முழுமையான முன்னேற்றத்தை நிச்சயப் படுத்துகிறது. முன்னேற்றம் இந்த இடங்களுக்கு ஒரு நிச்சயத் தேவையாகும்.
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி என்னவென்றால், இத்தகைய திட்டங்களை கிராம அளவில் செய்ய முடியும் - ஆனால் ஒரு தேசமே முன்னேறும் அளவு செய்ய முடியுமா என்பது. விடையாக, நான் பிரேசில் தேசத்தைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சென்ற இரு வருடங்கள் நான் பிரேசில் தேசத்திற்குப் பயணம் மேற்கொண்டேன். பிரேசில் பட்டினிக்கெதிரான போரில் வென்று வருகிறது! உலகின் வேறு எந்த தேசத்தை விடவும். அவர்களது முக்கிய வேறுபாடு என்னவென்றால், அவர்கள் இலவசங்களை நம்பாமல், மானியங்களுக்காக செலவழிக்காமல், பள்ளிச் சத்துணவு திட்டத்தில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சத்துனவுக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் மூன்றில் ஒரு பங்கு, வறுமையில் வாடும் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்ததே வாங்குகின்றனர். நாடு முழுவதும் ஒரே முறையாக இது இயங்குகிறது. இன்றைய அதிபர் லூகா, எல்லாரும் மூன்று வேளை உணவு பெறுவது தனது லட்சியம் என அறிவித்துச் செயல்படுகிறார். "பட்டினியை வெல்வோம்" என்னும் இந்தத் திட்டத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% சதவிகிதம் செலவாகிறது. பல கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். பட்டினியையும் வறுமையையும் வெல்கின்றனர் பிரேசிலின் பட்டினிக் கொடுமைகள் மெல்லத் தீர்ந்து கொண்டிருக்கின்றன. கிராம அளவுச் செயல் திட்டங்கள் ஒரு தேசத்தையே மாற்றி, பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நான் போய் அந்த உள்ளூர் விவசாயிகளை நேரில் கண்டு பேசினேன். இந்த மாற்றம் தந்த பலன்களை அவர்கள் இன்று அனுபவிக்கின்றனர். மிகவும் நல்ல முறையில் வாழ்க்கைத் தர உயர்வு கண்கூடாகக் காணமுடிகிறது.
இது மனிதாபிமானச் செயல்பாடு மட்டுமல்ல... பொருளாதாரக் கொள்கை ரீதியாகக் கண்டோமென்றால் பட்டினி மற்றும் சத்துணவுக் குறைபாடு, ஒரு நாட்டின் அடிப்படை பொருளாதாரத்தையே பாதிக்கிறது . மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% சதவிகித அளவுக்கு, சில நாடுகளில் 11% சதவிகித அளவுக்குக் கூட பாதிப்பு பலமாக இருக்கக்கூடும் என கணக்கியல் கூறுகிறது. சத்துணவு அடிப்படையில் மிகவும் பின்தங்கிய 36 தேசங்களைக் கண்டோமென்றால் 26000 கோடி பொருளாதார வருவாய் ஒவ்வொரு வருடமும் இழப்பு என்று கணக்கிடப் படுகிறது. ஆனால் இப்போது நாம் பேசிய திட்டங்கள் மூலம் இந்த 36 தேசங்களிலும் பட்டினியை அழிக்கும் வழிமுறைகளைச் செயல்படுத்த சுமார் 1030 கோடி செலவு ஆகும் என்று உலக வங்கி கணக்கிட்டுக் கூறுகிறது. வியாபார ரீதியாக மட்டும் பார்த்தால் கூட இந்த இழப்பு நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பிரச்சினையை உலகப் பொருளாதார வல்லுநர்களிடமும், அமைச்சர்களிடமும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்லாது வியாபார ரீதியாகவும் கொண்டு சென்று சத்தான உணவுமுறையில் நாம் முதலீட்டை செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது எனது பிரதான கனவாகும்.
நான் கற்றவைகளில் இருந்து தெளிவாகப் புரிவது ஒரு தேசத்தை மாற்ற உறுதியான மனம் படைத்த தலைவர்கள் இருப்பது அத்தியாவசியம் என்பது. 'இதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்' என உறுதி கொள்ளும் தலைவர்கள் மேற்பார்வையில் பெரும் மாற்றங்கள் படிப்படியாகத் துவங்குகின்றன. உள்ளூர் சூழல்கள் பொறுத்து வெளியுலகின் உதவிகளும் வரத் தொடங்குகின்றன. ஜி -20 நாடுகள் கூட்டமைப்பு பேச்சு வார்த்தையில் பிரான்ஸ் நாடு உணவு - பட்டினிப் பிரச்சினையை முக்கியமானதாக எடுத்துக்கொண்டிருக்கிறது. உணவு - பட்டினிப் பிரச்சினையை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தேசத்துக்கும் தனித்தனியாக நாம் தீர்க்க முடியாது. எல்லோரும் இணைந்தே தீர்க்க வேண்டிய பிரச்னை இது. எங்கள் ஐக்கிய நாடுகளின் உணவுத் துறை உதவித் திட்டங்கள் இன்று ஆப்பிரிக்காவில் 30 நாடுகளில் முடிவடைந்து விட்டன. அவை பட்டினியை வென்ற தருணங்களில் மட்டுமே முழுமை பெற்று முடிவடைந்திருக்கின்றன
இங்கு நான் இறுதியில் முன்வைப்பது ஒரு சவால். ஒரு குழந்தையோ மனிதனோ உணவு இல்லாமல், சத்துகள் இல்லாமல் சாவது கண்டு பொறுக்கக் கூடாத, பொறுக்கத் தேவையில்லாத காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எனது தாழ்மையான கருத்து. பட்டினியை வெல்வது பல வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று ஏற்கெனவே கண்டோம். ஆக, மாற்றம் நம்முள் இருந்து துவங்க வேண்டும். இங்கு, இந்த பேச்சு அரங்குகளில், பல தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களுடனும் தொழில்நுட்ப அறிஞர்களுடனும் பேசும் நல்வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். உங்கள் எல்லோரையும், மனிதகுலம் முழுமையின் சார்பாகவும் நிலத்தில் ஒரு கோடு வரைந்து, அதைத் தாண்டி, "இனி ஒருக்காலும் பட்டினிச் சாவுகளை அனுமதிக்க மாட்டோம்" என்று சுய உறுதிப்பாடு எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நம் குழந்தைகளிடம், "வரலாற்றில் முன்னாட்களில் பட்டினியின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மூளை வளர்ச்சிக் குறைபாடுடனும் உடல் சத்துக் குறைபாடுடனும் இருந்தன; ஆனால் இப்போது இந்தப் பிரச்னை அறவே இல்லை" என்று கூறும் நிலை வர, நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று வேண்டுகிறேன்.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராகிய ஜோசெட் ஷீரன், இங்கு பசி - பட்டினி பிரச்னை குறித்தும், உலகில் ஏன் போதுமான அளவு உணவு விளைச்சல் இருந்தாலும் பட்டினிச் சாவுகள் தொடரும் அவல நிலை இன்னும் இருக்கிறது என்பது குறித்தும், உணவுக்காக இன்னும் போர்கள் நடைபெறுவது குறித்தும் உரையாற்றுகிறார். அவரது கனவு, உணவுப் பிரச்சனையைத் தனி மனித அளவிலும் தனி தேசங்களுக்குள்ளும் தீர்க்க முயலாமல், உலகமே இணைந்து செயல்பட்டுத் தீர்க்க வேண்டும் என்பதாகும்.
Our generation is the first in history with enough resources to eradicate hunger worldwide. Josette Sheeran, the former head of the UN World Food Programme, shares a plan. Full bio »
Translated into Tamil by Murali Dharan
Reviewed by vidya raju
Comments? Please email the translators above.
11:15 Posted: Jul 2010
Views 366,818 | Comments 287
17:08 Posted: Aug 2009
Views 343,062 | Comments 92
18:00 Posted: May 2009
Views 253,252 | Comments 209
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.