மிக்க நன்றி. மதிநுட்பமானவர்களுள் உன்னத மதிநுட்பமானவர்கள் மத்தியிலே நிற்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது. அதீத ஆர்வம் பற்றிய சில கதைகளைச் சொல்ல இங்கு வந்துள்ளேன். எனக்குப் பிடித்த யூதப் பழமொழி ஒன்றுள்ளது.€€ உண்மையிலும் மிக உண்மையானது என்ன? விடை: கதை நானொரு கதை சொல்லுபவர். நமது பொது மனித இனம் பற்றிய உண்மையிலும் மிக உண்மையான சில விடயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். எல்லாக் கதைகளும் எனக்கு ஆர்வத்தைக் கூட்டின மற்றும் இன்னும் சிலவோ நான் எழுதும் வரை என்னைக் கவர்ந்து கொண்டிருந்தன. குறிப்பிட்ட கருப்பொருள்கள் தொடந்து வந்து கொண்டிருக்கும். நீதி, நியாயம், வன்முறை, மரணம், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள், சுதந்திரம். நம்மைச் சுற்றிக் காணப்படும் மாயைகள் பற்றி நான் அறிவேன், அதனால், நான் தொடர்புச் சம்பவங்கள், தீர்க்க தரிசனங்கள், உணர்வுகள், கனவுகள், இயற்கையின் சக்தி, மாயமந்திரம் ஆகியன பற்றி எழுதுகிறேன்.
கடந்த 20 வருடங்களில் நான் ஒரு சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன். ஆனாலும், 2006 பெப்ரவரி இத்தாலியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடியை ஏந்தும் வரை நான் அறியப்படாதவளாய் வாழ்ந்து வந்தேன். அது என்னை பிரபல்யமானவராக ஆக்கிவிட்டது. இப்போது என்னை மக்கள் மேஸிஸில் (Macy's) அடையாளம் கண்டு கொள்கிறார்கள். மற்றும் எனது பேரப்பிள்ளைகள் நான் "கூலானவர்" (Cool) என நினைக்கிறார்கள். (சிரிப்பு) எனது நான்கு நிமிட புகழைப் பற்றி உங்களிடம் சொல்ல அனுமதி தாருங்கள். ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் அமைப்பாளர்களுள் ஒருவர் என்னை அழைத்து, கொடி ஏந்துபவர்களில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார். இது நிச்சயமாக அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் உண்டாகியுள்ளதென பதிலளித்தேன். ஏனெனில், நான் ஒருபோதும் விளையாட்டு வீராங்கனையாக இருந்ததில்லை. உண்மையாக, நடைச்சாதனத்தின் (Walker) உதவியில்லாமல் அரங்த்தைச் சுற்றி வர என்னால் முடியுமென நான் நம்பவில்லை. (சிரிப்பு) இது சிரிக்கக்கூடிய விடயமொன்றல்ல என எனக்குச் சொல்லப்பட்டது. இதுவே முதன் முறையாக ஒலிம்பிக் கொடியை பெண்கள் மட்டும் ஏந்திச் செல்வதாக அமையப் போகிறது. ஐந்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர்கள் உள்ளனர். இயற்கையாகவே எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, நான் எதை உடுத்திக் கொள்ளப்போகிறேன்? என்பதுதான். (சிரிப்பு) ஒரு சீருடை என அவள் சொன்னாள். அத்தோடு எனது அளவீடுகளையும் கேட்டு நின்றாள். எனது அளவீடுகள். மிஸலின் மேன் போன்று ஊதிய உடை உடுத்திக் கொண்டிருப்பது போல் என்னை நான் கற்பனை செய்து கொண்டேன். (சிரிப்பு)
பெப்ரவரி மாதத்தின் நடுவினில் டியூரினில் நானிருந்த போது, ஆர்வமான பார்வையாளர்கள் 80 ஒலிம்பிக் குழுக்களிள், எந்த குழு வீதியில் சென்றாலும் ஆரவரிப்பதைக் கண்டேன். விளையாட்டில் போட்டியிடுவதற்காக அந்த விளையாட்டு வீரர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்திருந்தனர். அனைவரும் வெற்றியை பெற வேண்டியவர்கள் தாம், ஆனாலும், அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும். பனித்துளிகள், பனிக்கட்டியின் தடிப்பு, காற்றின் விசை என்பன விளையாட்டின் அல்லது ஓட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும். ஆனாலும், பயிற்சி அல்லது அதிர்ஷ்டம் என்பவற்றுக்கு அப்பால், முக்கியமானது, இதயம் தான். பயமில்லாத மற்றும் நம்பிக்கையுள்ள இதயம் மட்டுமே தங்கப் பதக்கம் வெல்ல முடியும். இது அனைத்தும் அதீத ஆர்வம் பற்றியதாகும். டியூரினின் தெருக்கள் சிவப்புச் சுவரொட்டிகளால் மூடப்பட்டு ஒலிம்பிக்கின் சொல்வாக்கை அறிவித்துக் கொண்டிருந்தது.
அதீத ஆர்வம் இங்கேயே வாழ்கிறது. அது எப்போதும் உண்மைதானே? இதயத்தில் எதனை நாம் கொண்டுள்ளோமோ, அதுவே நமது விதியை தீர்மானிக்கும். இதையே எனது புத்தகங்களின் பாத்திரங்களில் நான் வேண்டுகிறேன். ஒரு அதீத ஆர்வமுடைய இதயம். கேள்வி கேட்கின்ற, விதிகளை வளைத்துப் போடுகின்ற, இடர்களைச் சந்திக்கின்ற சாதனையாளர்கள், போராளிகள், முயற்சியாளர்கள், வீரர்கள் ஆகியோரே எனக்குத் தேவை. இந்த அறையில் இருக்கும் அனைவரையும் போன்ற மக்கள். பொது உணர்ச்சியுடைய நல்ல மனிதர்கள், ஆர்வமுள்ள பாத்திரங்களை உருவாக்கமாட்டார்கள். (சிரிப்பு) இவர்கள் சிறந்த முன்னாள் துணைவர்களை மட்டுமே உருவாக்குவர். (சிரிப்பு) (கைதட்டல்)
அரங்கத்தின் ஒப்பனை அறையில், கொடி ஏந்தும் ஏனையவர்களை நான் சந்தித்தேன்: மூன்று விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் நடிகைகளான சுசான் சரன்டன் மற்றும் சோபியா லோரன் ஆகியோர். அத்தோடு, அதீத ஆர்வமுடைய இதயங்கொண்ட இரண்டு பெண்கள். நோபல் பரிசு வென்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய், இவர் 30 மில்லியன் தாவரங்களை நட்டு, அதன் மூலம் சில ஆபிரிக்காவின் பிரதேசங்களில் மண் மற்றும் காலநிலையை மாற்றியிருக்கிறார். அதுமட்டுமா பல கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுமுள்ளார். அடுத்தது கம்போடியாவைச் சேர்ந்த செயற்பாட்டாளரான, சோமாலி மம், இவர் சிறுவர் விபச்சாரத்திற்கெதிராக அதீத ஆர்வத்துடன் போராடுகிறார். இவர் 14 வயதாவிருக்கும் போதே, இவரின் பாட்டனால் விபச்சார விடுதிக்கு விற்கப்பட்டார். இளம் கன்னியுடன் உடலுறவு கொண்டால் எயிட்ஸ் நோயிலிருந்து குணமடைய முடியும் என நம்பும் ஆண்கள், இளம் பெண்களை கற்பழித்த உண்மையை எங்களிடம் சொன்னார். விபச்சார விடுதிகளில் ஒரு நாளைக்கு 5 முதல் 15 பேர் வரை சிறு பிள்ளைகளை வற்புறுத்தி உடலுறவு கொண்டுள்ளார்கள். அத்தோடு, அவர்கள் மறுக்கும் பட்சத்தில் மின்சாரத்தினால் கொடுமையிழைக்கப்பட்டுள்ளார்கள். ஒப்பனை அறையில் நான் எனது சீருடையைப் பெற்றுக் கொண்டேன். நான் வழக்கமாக அணியும் உடை போல அது இருக்கவில்லை. ஆனாலும், நான் எதிர்பார்த்தது போல் அது மிஸலின் மேன் உடையை போலும் இருக்கவில்லை. உண்மையாகவே நன்றாகவே இருந்தது. நான் குளிர்சாதனப் பெட்டி போல் தோற்றமளித்தேன். (சிரிப்பு) அழகினதும் அதீத ஆர்வத்தினதும் அகிலத்தின் அடையாளமான சோபியா லோரனைத் தவிர, ஏனைய கொடி ஏந்துபவர்களும் அப்படித்தான் தோன்றினார்கள். சோபியாவுக்கு வயது 70க்கும் அதிகம் தான். உன்னதமாகத் தோன்றினார். அவர் ஆழமான மச்சத்தோடு அழகானவர், ஒல்லியானவர் மற்றும் உயரமானவர். இப்போது, எப்படி சுருக்கமில்லாத தோலையும் அதில் ஆழமான மச்சத்தையும் கொண்டிருக்க உங்களால் முடியும்? எனக்குத் தெரியாது. "எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது?" என அவரிடம் தொலைக்காட்சி பேட்டியின் போது கேட்கப்பட்டது. அதற்கு, "இருப்பு நிலை. எனது முதுகு எப்போதும் நேரானதுதான். அத்தோடு, நான் முதியோர்களின் சத்தங்களை உண்டுபண்ணுவதில்லை" என பதிலளித்தார். (சிரிப்பு) பூமியிலேயுள்ள மிகச் சிறந்த அழகான பெண்களில் ஒருவரிடமிருந்து உங்களுக்குச் சில இலவசமான ஆலோசனைகள் கிடைக்கின்றன. உளருவதில்லை, தும்முவதில்லை, கஷ்டத்துடன் மூச்சு வாங்குவதில்லை. தன்னோடு தானே கதைப்பதில்லை. "குசு" விடுவதில்லை. (சிரிப்பு) நல்லது, அவர் அப்படிச் சரியாகச் சொல்லவில்லை. (சிரிப்பு)
நள்ளிரவின் ஒரு நேரத்தில் அரங்கின் ஓரிடத்திற்கு நாம் கூட்டப்பட்டோம், அங்கு ஒலிபெருக்கிகள் ஒலிம்பிக் கொடி என அறிவித்தன. இசை ஆரம்பித்தது. அதே அய்டா அணிவகுப்பு இசை இங்கும் ஒலிக்கக் கேட்டேன். எனக்கு முன்னால் சோபியா லோரன் இருந்தார். அவர் என்னை விட ஓரடி உயரமானவர். கூம்பிய அவர் கூந்தலை கணக்கெடுக்காமலேயே. (சிரிப்பு) தனது தோளில் கொடியை ஏந்திய வண்ணம், அவர் ஆபிரிக்க வனாந்தர ஒட்டகச் சிவிங்கி போன்று அழகாக நடந்து சென்றார். அவரை நானும் தொடர்ந்தேன். (சிரிப்பு) காலை திடமாக்கி, எனது கரத்தில் கொடியை ஏந்திக் கொண்டேன், அதனாலே உண்மையாகவே எனது தலை அக்கொடியினால் மறைந்து போனது. (சிரிப்பு) எல்லா புகைபடக்கருவிகளும் சோபியாவின் பக்கமே இருந்தன.™ அது எனக்கு அதிர்ஷ்டமானது தான். ஏனெனில் அநேகமான செய்திப் புகைப்படங்களில் நானும் தோன்றினேன். சில நேரங்களில் சோபியாவின் கால்களுக்கிடையில். (சிரிப்பு) அது பல ஆண்களும் இருக்க ஆசைப்படும் இடமுமாகும். (சிரிப்பு) (கைதட்டல்)
எனது மொத்த வாழ்வின் உன்னதமான நான்கு நிமிடங்கள் அந்த ஒலிம்பிக் அரங்கில் இருந்ததுதான். இதை நான் சொல்லும் போது, எனது கணவர் கோபித்துக் கொள்வார். ஆனாலும் நாம் தனியாகச் செய்யும் அந்த விடயம் வழமையாக நான்கு நிமிடங்களுக்கு குறைவாகவே நீடிக்குமென அவருக்கு நான் விளங்கப்படுத்தியுமுள்ளேன். (சிரிப்பு) அதனால் அதை அவர் தனிப்பட்ட விடயமாக எடுக்கக்கூடாது. அந்த உன்னதமான நான்கு நிமிடங்கள் பற்றிய அனைத்து செய்திகளையும் நான் வைத்திருக்கிறேன். ஏனெனில், முதிய வயது என் மூளைக் கலங்களை அழிக்கும் போதும் அந்த விடயத்தை நான் மறக்க விரும்பவில்லை.
ஒலிம்பிக் திறவுச் சொல்லை என்றும் எனது இதயத்தோடு சுமந்து செல்ல விரும்புகிறேன். அது தான் அதீத ஆர்வம். ஆக, இதோ அதீத ஆர்வத்தின் கதை. ஆண்டு 1998, இடம் காங்கோ டுட்ஸி அகதிகளுக்கான சிறை முகாம். சிறு தகவல், உலகில் அனைத்து அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களில் 80 சதவீதமானவர்கள் பெண்களும் சிறுமிகளுமாவர். கொங்கோவிலுள்ள இந்த இடத்தை நாம் மரண முகாம் என அழைக்கலாம். ஏனெனில், கொல்லப்படாதவர்கள் கூட, நோயினாலும் பட்டினியாலும் இங்கு இறந்து போவர். ரோஸி மபென்டோ என்ற இளம் பெண்ணும் அவளின் பிள்ளைகளும் தான் இந்தக் கதையின் முக்கிய பாத்திரங்கள். அவளொரு கற்பிணியும் விதவையுமாவாள். அவளது கணவன் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதை படையினர் அவளை வலுக்கட்டாயமாகப் பார்க்கச் செய்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவளது ஏழு பிள்ளைகளையும் காப்பாற்ற அவளால் முடிந்தது. ஒரு சில மாதங்களுப்பின் பின்னர், அவள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தாள். இரண்டு சின்னஞ் சிறிய ஆண் குழந்தைகள். அவள் தொப்புள் கொடியைக் கம்பொன்றினால் வெட்டினாள். அவள் முடி கொண்டே அதில் முடிச்சு போட்டாள். முகாமின் பொறுப்பாளர்களின் விருப்பைப் பெறுவதற்காக அவர்களின் பெயரையே இரட்டைக் குழந்தைக்கு வைத்து, தேநீர் ஊட்டினாள் ஏனெனில், அவளது பால் போதுமானதாக இருக்கவில்லை. படையினர் அவளது தங்குமிடத்திற்குள் உட்புகுந்து அவளது தலையில் துப்பாக்கியை வைத்து, தனது மூத்த மகளைக் கற்பழிக்க முற்பட்டபோதும், அவளின் மகளை இறுக அணைத்து அது நடக்காமல் தடுத்தாள். எப்படியோ இந்தக் குடும்பம் 16 மாதங்களிற்கு பிழைத்தது. பின்னர், ரோஸ் மபென்டோவும் அவளின் ஒன்பது பிள்ளைகளும் அசாதாரணமான அதிஷ்டத்தாலும், சாசா சானொப் என்ற இளைஞனின் அதீத ஆர்வங் கொண்ட இதயத்தாலும் இன்று அரிசோனாவிலுள்ள பீனிக்ஸிள் அமெரிக்க மீட்புத் திட்டத்தின் கீழ் நலமாய் வாழ்வோட்டுகிறார்கள்.
மபென்டோ என்பது ஸ்வாஹிலி மொழியில் உன்னத அன்பு என்று பொருள். எனது புத்தகங்களின் பிரதான பாத்திரங்கள் ரோஸ் மபென்டோ போன்ற பலமான மற்றும் அதீத ஆர்வமுள்ள பெண்களாவர். நான் அவற்றை உருவாக்குவதில்லை. அதற்கான தேவையுமில்லை. சுற்றுப்புறச் சூழலில் அவர்களை நான் காண்கிறேன். எனது வாழ்வில் பெண்களுடனும் பெண்களுக்காகவும் வேலை செய்திருக்கிறேன். அவர்களை எனக்கு நன்கு தெரியும். ஆணாதிக்கமுள்ள கதோலிக்க பழைமையைப் பாதுகாக்கும் குடும்பத்தில் உலக முடிவின் தொன்மைக் காலத்தில் நான் பிறந்தேன். அதுவரைக்கும் சிலியில் "தீவிர பெண்ணியல்வாதி" என்ற சொல்லே எட்டவில்லை, ஆனால், நான் ஐந்து வயதிலேயே தீவிர பெண்ணியல்வாதியாகவே இருந்தேன். அதனால், எனக்கு என்ன பிரச்சனை என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. (சிரிப்பு) எனது சுதந்திரத்திற்கும் ஆணாதிக்கம் தொடர்பாக விமர்சிப்பதற்கும் பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளதென்பதை நான் பின்னர் கண்டறிந்து கொண்டேன். ஆனாலும் நான் அந்த விலையைக் கொடுப்பதில் மகிழ்ந்தேன். ஏனெனில், நான் பெறும் ஒரு விமர்சனத்திற்காக என்னால் இரண்டு விமர்சனங்களை வெளியிட முடிந்தது. (சிரிப்பு) பெண்ணியல் வாதம் காலாவதியாகிவிட்டது, அதிலிருந்து நான் விடுபட வேண்டும் என தனது வயது இருபதுகளில் இருக்கும் போது எனது மகள் போலா என்னிடம் சொன்னாள். மறக்க முடியாத சண்டையொன்று நாம் பிடித்தோம். பெண்ணியல் வாதம் காலாவதியாகிவிட்டதா? ஆம், எனது மகள் மற்றும் இங்கிருக்கும் அனைவர் போன்ற வரப்பிரசாதமுடைய பெண்களுக்கு அப்படியிருக்கலாம், ஆனால், இன்னும் வற்புறுத்தி இளமையில் திருமணம், விபச்சாரம், திணிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவூட்ட முடியாத அல்லது கூடாத உலகளவில் உள்ள பெருன்பான்மையான எமது சகோதரிகளுக்கு அது அப்படியாக இருக்க முடியாது. அவர்களது உடலிலோ அல்லது வாழ்விலோ எந்தவித கட்டுப்பாடும் அவர்களிடம் இல்லை. கல்வி மற்றும் சுதந்திரம் என்பன அவர்களிடம் இல்லை. அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள், சிலவேளை கொலை செய்யவும் படுகிறார்கள். பெண்ணியல் வாதி என அழைக்கப்படுவது இன்றைய பல மேற்கத்திய இளம் பெண்களுக்கு இழிவாகத் தோன்றுகிறது. பெண்ணியல் கவர்ச்சிகரமாய் என்றுமே இருந்ததில்லை. ஆனாலும் அது என்னை லீலைகள் செய்வதிலிருந்து ஒருபோதும் தடுக்கவும் இல்லை. ஆணில்லாத குறை எனக்கு அரிதாகவே தோன்றியது. (சிரிப்பு) எந்தக் காரணங்களாலும் பெண்ணியல் இறந்து போகவில்லை. அது பரிணாம வளர்ச்சி கொண்டிருக்கிறது. உங்களுக்கு அந்தச் சொல் பிடிக்காவிட்டால், தேவைதைக்காக வேண்டியேனும் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். அப்ரோடைட் அல்லது வீனஸ் அல்லது பிம்போ அல்லது உங்களுக்கு வேண்டியமாதிரி அழையுங்கள். பெயரால் எதுவும் ஆகப்போவதில்லை, அது என்னவென்பதை புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு வழங்கினாலே போதும்.
இதோ இன்னொரு அதீத ஆர்வத்தின் கதை, ஆனால் இது சோகக் கதை. இடம், பங்களாதேஷின் கிராமமொன்றிலுள்ள ஒரு சிறிய பெண்கள் சுகாதார நிலையம். ஆண்டு 2005. தனது மூன்று வார கால விடுமுறைக்கு தொண்டராகப் பணிபுரிய சுகாதார நிலையம் சென்றவள் தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி என்ற பல் சுகாதார வைத்தியர். அவள் பற்களை சுத்தம் செய்ய ஆயத்தமானாள், ஆனால், அங்கு வைத்தியர்களோ, பல் வைத்தியர்களோ இல்லை என்பதையும் சுகாதார நிலையம் வெறும் கொசுக்கள் மொய்க்கும் கொட்டகையாக இருப்பதையும் அங்கு சென்றவுடன் அறிந்து கொண்டாள். சிகிச்சை பெறுவதற்காக வெளியே பல மணிநேரம் பெண்கள் வரிசையாகக் காத்திருந்தனர். பல கடவாய்ப் பற்கள் பழுதடைந்த நிலையில் அதிக வலியுடன் முதலாவது நோயாளி தோன்றினாள். பற்களைப் பிடுங்குவதுதான் இதற்கான ஒரே தீர்வு என ஜெனி புரிந்து கொண்டாள். அவள் அதற்கான அனுமதிப் பத்திரம் வைத்திருக்கவில்லை. அவள் ஏற்கனவே அதை செய்திருக்கவுமில்லை. ஆபத்துகள் நேர்ந்துவிடலாம் எனப் பயந்தாள். அவளிடம் உரிய கருவிகள் கூட இருக்கவில்லை, ஆனாலும், அவள் அதிஷ்டவசமாக கொஞ்சம் நொவோகய்ன் கொண்டு வந்திருந்தாள். வீரமும் அதீத ஆர்வமும் கொண்ட இதயத்தையுடையவள்தான் ஜெனி. இறைவனை வேண்டிக் கொண்டவளாய், சத்திர சிகிச்சை நடத்த ஆரம்பித்தாள். முடிவில் சுகமுற்ற நோயாளி, அவளின் கைகளை முத்தமிட்டாள். அந்த நாளில் பல பற்களை பல் வைத்தியரான அவள் பிடுங்க வேண்டியதாயிற்று. அந்த சுகாதார நிலையத்திற்கு மறுநாள் காலையில் அவள் வந்த போது, அவளின் நேற்றைய முதலாவது நோயாளி, அவளுக்காக தன் கணவருடன் காத்திருந்தாள். அந்தப் பெண்ணின் முகம் வதைக்காய் போன்று தோற்றமளித்தது. அவ்வளவாய் அது வீங்கியிருந்தது, உங்களால் கண்களைக் கூட காண முடியாது. கோபாவேசத்தோடு கணவன், அமெரிக்கரைக் கொல்லப் போவதாய் அச்சுறுத்தினான். ஜெனி அச்சத்தோடு என்னவாயிற்று என எண்ண, நோயாளியின் நிலை சத்திர சிகிச்சைக்கான நிலை அல்ல என மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிந்து கொண்டாள். தனக்கு இரவுச் சாப்பாடு சமைக்க குறித்த நேரத்தில் வீட்டிற்கு வராததால், கணவன் மனைவியை முந்திய நாள் தாக்கியிருக்கிறான்.
மில்லியன் கணக்கான பெண்கள் இன்று இப்படித்தான் வாழ்கின்றனர். அவர்கள் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள். அத்தோடு, தொழிலாளர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாகவிருக்கின்றனர், உலக மொத்தச் சொத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே அவர்களுக்குச் சொந்தமானது. ஒரே தொழிலுக்காக ஆண்களை விட பெண்கள் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள் அவ்வாறு பெற்றபோதிலும், அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத காரணத்தால் நிலையற்ற அளவில் வாழ்கிறார்கள், மற்றும் அவர்கள் தொடர்ச்சியாக சீரழிப்பு, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் மூலம் அச்சுறுத்தப்படுகிறார்கள். பெண்கள் கல்வி, தொழில், தனது வருமானத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் மற்றும் பொருள்களை கொண்டிருத்தல் என்பன சமூகத்திற்கு நன்மை பயக்குமென்பது தெளிவான உண்மையாகும். பெண் உரிமை பெறும்போது, அவளின் பிள்ளைகள் மற்றும் குழந்தைகள் என்பன முன்னேறும். குடும்பங்கள் செளபாக்கியம் அடையும் போது, கிராமமும் செளபாக்கியம் கொள்ளும். ஈற்றில் முழுநாடுமே செளபாக்கியம் அடைந்துவிடும்.
கென்யாவிலுள்ள ஒரு கிராமத்திற்கு வங்காரி மாதாய் செல்கிறார். அங்கு நிலம் வறிதாகக்கூடியது என்பதை பெண்களுக்கு விளங்கப்படுத்துகிறார் ஏனெனில் அவர்கள் மரங்களை வெட்டி விற்பனை செய்தார்கள். பெண்களைக் கொண்டு புதிய மரங்களை நட்டு அதற்கு துளி துளியாக நீரூற்றச் செய்தார். ஐந்தாறு ஆண்டுகளின் பின்னர் அவர்கள் வனாந்தரமொன்றைப் பெற்றார்கள். மண் வளமானது. கிராமம் காக்கப்பட்டது. ஏழ்மையான மற்றும் மிகப் பின்தங்கிய சமூகங்கள் பெண்களை எப்போதும் கீழ்மட்டத்திற்கே ஆக்கி விடுகின்றன. ஆனாலும் தெளிவான உண்மை அரசாங்கங்களாலும் வள்ளல்களாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. பெண்களின் செயற்றிட்டங்களுக்கு ஒரு டாலர் கொடுக்கப்படும் அதே வேளை, ஆண்களின் செயற்றிட்டங்களுக்கு 20 டாலர்கள் வழங்கப்படுகின்றன. பெண்கள் மனித குலத்தின் 51 சதவீதமானவர்கள். அவர்களை முன்னேற்றும் போது, தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் பொழுதுபோக்கு என்பவற்றுக்கு மேலாக எல்லாமே மாற்றங் காணும். பெண்கள் இணைந்து, அறிவித்து, கற்று ஒன்றாகப் பணியாற்றும் போது, ஆதாரவற்ற உலகத்தில் சமாதானம் மற்றும் சுபீட்சம் என்பவற்றைக் கொண்டுவரலாம் என நான் உறுதி கூறுகிறேன். இன்றளவில் எந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்படுவது பொது மக்களே, பிரதானமாக பெண்களும் சிறுவர்களும். அவர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆண்கள் உலகத்தை ஓட்டுகிறார்கள். பாருங்கள் எவ்வளவு குப்பைகள் கிடக்கின்றன என்பதை.
எமக்கு எந்த வகையான உலகமொன்று தேவை? இதுவே பலரும் கேட்கும் அடிப்படையான கேள்வியாகும். உலகத்தின் அமைவைப் போன்றே எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பொருத்தமானது தானா? வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லோரினதும் வாழ்க்கையின் தரம் உயர்த்தப்பட்ட, எமது வாழ்வுகள் பாதுகாக்கப்பட்ட நிலையை கொண்ட உலகே எமக்குத் தேவை. யூஸி பெர்கலி நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெர்னான்டோ பொடேரோவின் ஓவியங்களை ஜனவரி மாதம் பார்த்தேன். அமெரிக்காவின் எந்த நூதனசாலையோ கலாபவனமோ கொண்டிறாத அபூகிராய்ப் சிறையை தொனிப்பொருளாய் கொண்ட பொடேரோவின் படைப்பை நியூ யோர்க் கலாபவனமே தைரியத்துடன் காட்சிக்கு வைத்துள்ளது. கொடூரங்கள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் என்பனவற்றினைக் காட்டும் பல ஓவியங்கள் உன்னதமான பொடேரோவின் பாணியில் காட்சியளிக்கின்றன. என்னால் எனது மனத்திலிருந்தோ இதயத்திலிருந்தோ அந்தக் காட்சிகளை எடுத்துவிட முடியவில்லை. குற்ற விதிவிலக்கின் பலத்தை எண்ணி அதிகம் பயந்து கொள்கிறேன். அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் துஷ்பிரயோகத்தின் அதிகாரத்தையும் கண்டு அச்சம் கொள்கிறேன். எமது இனத்தில், ஆண்களே உண்மைகளை வரையறுக்கின்றனர், அதுவே மற்றவர்களும் வலுக்கட்டாயமாக உண்மையென ஏற்றுக் கொண்டு விதிகள் பின்தொடரப்படுகின்றன. விதிகள் எப்போதுமே மாற்றப்படுகின்றன, ஆனால் அவர்களுக்கு நன்மை பயப்பனவாகவே இருக்கின்றன. பொருளாதாரத்தில் பயன்படாத சமனான விளைவுக் கொள்கை இங்கே அழகுற பயன்படுகிறது. அடியில் இருப்போர்கள் மேலேயிருப்போர்களை விட சமபகிர்வில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரே அடிமட்டத்தில் இருக்கின்றனர். தேவைகளுள்ள ஆதரவற்ற பல ஆண்களுக்குக்கூட துஷ்பிரயோகம் செய்ய -- பெண் அல்லது சிறுவர் -- ஆட்கள் இருக்கின்றனர். பால், வருமானம், இனம் மற்றும் வகுப்பு போன்றவற்றின் மூலம் பலரை சிலர் ஆதிக்கம் செலுத்தும் விடயத்தில் நான் அலுத்துப் போயுள்ளேன்.
எமது நாகரிகத்தில் அடிப்படை மாற்றங்களை துளிர்விடச் செய்வதே காலத்தின் தேவை என நான் எண்ணுகிறேன். ஆனாலும், உண்மையான மாற்றத்திற்காய், உலக முகாமைத்துவத்தில் பெண்களின் சக்தி எமக்கு தேவைப்படுகிறது. குறிப்பிட்ட அளவில் பதவி அதிகாரங்களில் பெண்கள் இருப்பது எமக்குத் தேவை, ஆண்களில் பெண்கள் சக்தியை நாம் விதைக்க வேண்டும். நான் நிச்சயமாக இளமையான மனங்கொண்ட ஆண்களைப் பற்றி கதைக்கிறேன். கிழவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்கள் சாகும் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான். (சிரிப்பு) ஆம், சோபியா லோரனின் நீண்ட கால்களையும் திரண்ட மார்புகளையும் பெற்றுக் கொள்ள எனக்கு ஆசை. ஆனால், வாய்ப்புக் கிடைத்தால், வங்காரி மாதாய், சோமலி மம் மற்றும் ரோஸ் மபென்டோ போன்றோரின் வீரமுள்ள இதயம் பெறவே நான் விரும்புவேன். எனக்கு இந்த உலகை நல்லதாக உருவாக்க வேண்டும். மிக நன்றாக இல்லாவிட்டாலும், நன்றாகவாவது. ஏனில்லாமலில்லை? அது முடியும். இந்த அறையைச் சுற்றிப் பாருங்கள் -- எத்துணை அறிவு, சக்தி, ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம். இருக்கைகளை விட்டு எழுந்து அதீத ஆர்வத்தோடு உன்னதமான உலகை உருவாக்கும் நோக்குடன் வேலை செய்யப் புறப்படுவோம். நன்றி.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
நூலாசிரியரும் செயற்பாட்டாளருமான இஸபெல் அலன்டே, இந்த உரையில் பெண்கள், படைப்பாக்கம், பெண்ணியலின் வரைபிலக்கணம் மற்றும் அதீத ஆர்வம் என்பனவற்றைப் பற்றிக் கலந்துரையாடுகிறார்.
Novelist Isabel Allende writes stories of passion. Her novels and memoirs, including The House of the Spirits and Eva Luna, tell the stories of women and men who live with passionate commitment -- to love, to their world, to an ideal. Full bio »
Translated into Tamil by Tharique Azeez
Reviewed by Santhosh Kumar Subramanian
Comments? Please email the translators above.
18:36 Posted: Jun 2006
Views 699,542 | Comments 165
13:45 Posted: Sep 2008
Views 535,006 | Comments 89
22:52 Posted: Apr 2008
Views 983,843 | Comments 117
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.